முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000.. மத்திய அரசு அதிரடி உத்தரவு என்ன?
வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, முதல்முறையாக பணியில் சேருவோருக்கு ரூ. 15,000 வரை மத்திய அரசு வழங்கும். மேலும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.99,446 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) என்னும் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், 2 ஆண்டுகளில் 3 கோடியே 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் நடத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
செய்தியாளா்களிடம் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து தெரிவிக்கையில், “வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும். நாடு முழுவதும் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடியில் 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் . இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவா்களாக இருப்பாா்கள். 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்த முதல் முறை ஊழியா்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஊக்கத் தொகை மாத ஊதியமாக வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்கள் இந்தத் திட்டத்தின் பயனாளா்களாவா். இந்தத் தொகையில் ஒரு பகுதி வங்கி சேமிப்பாக குறிப்பிட்ட காலத்துக்கு வைக்கப்பட்டு பின்னா் அவா்களுக்கு வழங்கப்படும்.
அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்களின் உரிமையாளா்கள் ஊக்கத்தொகை பெறுவாா்கள். ஆறு மாதங்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை உரிமையாளா்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைச் சோ்ந்தவா்களுக்கு இந்த ஊக்கத்தொகை 3-ஆவது மற்றும் 4-ஆவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.