வைகோவின் புதிய குற்றச்சாட்டு pt web
தமிழ்நாடு

“2011ல் செய்த தவறுக்காக அனுபவிக்கிறார் ஓபிஎஸ்” – வைகோவின் புதிய குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?

2011 தேர்தல் சீட் தொடர்பாக ஜெயலலிதாவிடம் தவறான தகவல்களை கூறியவர் ஓ.பன்னீர்செல்வம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

PT digital Desk

“2011 தேர்தல் சீட் தொடர்பாக ஜெயலலிதாவிடம் தவறான தகவல்களை கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். 2011ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

“கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். 12 சீட்தான் என்றார்கள். இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்கு உடன்பட முடியாது.. இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டால், கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன்; அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓபிஎஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று ‘அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் முறித்துவிட்டார்’ என்று பொய்யைச் சொல்லிவிட்டார்.

பின் கேள்விப்பட்டேன். தினமணி வைத்தியநாதன் இதைச் சொன்னார். 15 சட்டமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபாவும் கொடுப்பதென்று அவர் (ஜெயலலிதா) முடிவெடுத்துவிட்டார். நீங்கள் நேராகச் சென்று சந்தித்தால் இதை உறுதிப்படுத்துவார்கள் என்று சொல்லி என்னிடம் பேசுவதற்கு துக்ளக் சோவும், தினமணி வைத்தியநாதனும் படாதபாடு பட்டிருக்கிறார்கள். நான் செல்போனையெல்லாம் ஆஃப் செய்துவிட்ட இருக்கும் இடமே தெரியக்கூடாது என்று இருந்தேன். மாலைதான் தாயகத்திற்கு வந்தேன். ஓபிஎஸ் அழைப்பார் என்று செல்போனைக் கையிலேயே வைத்திருந்தேன். அவர் கூப்பிடவேயில்லை. அதன்பலனை இன்று ஓபிஎஸ் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்” என வைகோ தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “ஜெயலலிதா காலத்தில் நால்வரணி, ஐவரணி என்றெல்லாம் குழுக்கள் இருந்தன. அவர்கள் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள். ஆனால், முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பொதுச்செயலாளரிடம் கேட்டு சொல்கிறோம் என்றுதான் சொல்வார்கள். ஓ.பி.எஸ்க்கும் அது பொருந்தும். எனவே, ஓபிஎஸ் தவறான தகவலைக் கொடுத்தார் என்பது வைகோவின் புரிதல்.

தராசு ஷ்யாம்

2006 தேர்தலின்போது அதிமுக, மதிமுக, ஜனதா தளம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்மாநில முஸ்லீம் லீக் போன்றோர்தான் அக்கூட்டணியில் இருந்தார்கள். அப்போது வைகோ ஜெயலலிதாவிற்கு அடுத்த இடத்தில் அந்தக் கூட்டணியில் இருந்தார். அப்போது மதிமுகவிற்கு 35 சீட்டுகளை ஒதுக்கினார்கள். 2006ல் இருந்து 2011க்கு இடைப்பட்ட காலத்தில் வைகோவின் அரசியல் நிலைப்பாடு வெகுவாக மாறியது. அப்படி மாறும்போது 2006ல் வைகோவிற்கு கிடைத்த வாய்ப்பு 2011ல் விஜயகாந்திற்கு சென்றது.

2010 வரை விஜயகாந்த் தான் முதலமைச்சர் என தேமுதிக கூறிவந்த நிலையில், பண்ரூட்டியார் உள்ளிட்டோரின் முயற்சியாலும், அதிமுகவிற்குள் இருந்த அழுத்தம் காரணமாகவும், மதிமுகவுடன் கூட்டணி  வைப்பதவை விட தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது உகந்தது என்ற எண்ணத்திற்கு அதிமுக வந்தது. அது 2011 தேர்தல் வெற்றியாகவும் முடிந்தது. எனவே, பழைய வரலாறை இப்போது நினைவு கூறுவதன் மூலம் எவ்வித பயனும் இல்லை என்பதுதான் என் கருத்து. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து தலைவர்களும் மறைந்தபின் இப்போது ஏன் பழைய வரலாறைக் கூற வேண்டும் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை” எனத் தெரிவித்தார்.