கோவை வரும் பிரதமர் மோடியை வரவேற்று தமிழக பாஜகவினர் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.
பாஜக சார்பில் கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரை கொங்கு பாஷையில் வரவேற்கும் விதமாக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் முயற்சியில் கலை இலக்கிய பிரிவின் உமேஷ்பாபு 'ஆர்கெஸ்ட்ரா' சண்முகம் இணைந்து பாடல் வரிகளை தயாரித்துள்ளனர்.
''வாங்க மோடி வணக்கங்க மோடி.. கொங்கு மக்கள் வரவேற்போம் கோடி.. நீங்க தந்த திட்டங்கள் கோடி..’’ என்ற மூன்று நிமிட பாடலை தயாரித்துள்ளனர். இதில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' என்ற முதல் வரியை எல்.முருகன், சி.டி.ரவி, சி.பி. ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, முருகானந்தம் உள்ளிட்டோர் பாடி உள்ளனர். சில வரிகளை பாடகர்களுடன் இணைந்து வானதியும் பாடியுள்ளார். இந்த பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.