மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்த நிலையில், தலைமை மீது இருக்கும் அதிருதிதான் காரணமா என்று பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இருக்கும் மனக்கசப்பு இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் பேசிய நிலையில், பத்திரிகையாளர்களிடம் காரணத்தை சொல்லி இருக்கிறார் செங்கோட்டையன். அதிமுகவில் நடப்பதை விரிவாக பார்க்கலாம். எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக தற்போது பல அணிகளாக பிளவுற்று கிடக்கிறது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி மாறிவிட்டாலும், தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை சந்திப்பது அதிமுக தொண்டர்களுக்கே அழற்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது ஒற்றுமை எனும் கருத்து நிலவும்போதெல்லாம், அந்த பேச்சுக்கே இடமளிக்காமல், 2026ம் ஆண்டு மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கூறி வருகிறார் எடப்பாடி.
தனியாக உரிமை மீட்பு குழு நடத்தும் ஓபிஎஸ்ஸும், ஒன்றிணையும் முயற்சியில் அயர்ந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்களே குமுற, இபிஎஸ் பக்கம் இருப்பவர்களும் சொல்லவும் முடியாமல், மெள்ளவும் முடியாமல் அமைதிகாத்து வருவதாக தெரிகிறது. இதில், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் விசுவாசமாக இருக்கும் செங்கோட்டையன், சமீபகாலமாக அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடாகவே அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவில் அவர் பங்கேற்காமல் தவிர்த்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனினும், தான் பங்கேற்காமல் தவிர்த்ததற்கு செங்கோட்டையனே காரணம் கூறி விட்டாலும், இந்த விவகாரம் பேசுபொருளாக இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக ஒன்றிணைய வேண்டும்.. அதற்கான கெடு ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 என்று, ஓபிஎஸ் அணியில் இருக்கும் சீனியர்கள் நாள் குறித்திருந்தனர். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஒற்றுமை எனும் பேச்சுக்கே இடமளிக்காமல், ஓநாயும், வெள்ளாடும் எப்படி ஒன்று சேர முடியும் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதி, ஒற்றுமை பேச்சுக்கு எண்ட் கார்டு போட்டார் எடப்பாடி. இதனால் செங்கோட்டையனும் கடுகடுப்பில் இருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார்போல், அவர் அதிருப்தியில் இருப்பதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்தார் மருது அழகுராஜ். செங்கோட்டையனுக்கு எடப்பாடியின் பெயரை குறிப்பிடக்கூட விருப்பமில்லை. அதனால்தான் பொதுச்செயலாளர் என்று கூறுகிறார் என்றவர், எடப்பாடியை பொதுச்செயலாளராக செங்கோட்டையன் ஏற்கவில்லை என்றும் குண்டைத் தூக்கிப்போட்டார்.
இப்படியான சூழலில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தபோது, முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் Present ஆக, செங்கோட்டையன் ஆப்செண்ட் ஆனார். ஈரோட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற செங்கோட்டையன், தனது அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்த நிலையில்தான், சென்னைக்கு செல்லாதது ஏன்? புறக்கணிப்பா எனும் கேள்விக்கு பதிலளித்த அவர், நினைவுநாள் என்றால் நிச்சயம் சென்றிருப்பேன்.. பிறந்தநாள் என்பதால் இங்கேயே தொண்டர்களுடன் கொண்டாடுகிறோம். இங்கு இருப்பவர்களை ஊக்குவிப்பது முக்கியமானது என்று முடித்து வைத்தார். அதேபோல, ஓநாயும் வெள்ளாடும் ஒன்று சேர முடியாது என்ற எடப்பாடியின் அறிக்கை குறித்து கேட்டபோது, அதை அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி நகர்ந்தார். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பன் நான்.. என்னை சோதிக்காதீர்கள், அதுதான் எனது வேண்டுகோள் என்று சில தினங்களுக்கு முன்பாக அவர் பேசியது பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், ஒற்றுமை பேச்சுக்கு அவர் அழுத்தம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.