பாரம்பரியமும், பெருமையும் கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பல்கலைக்கழக பதிவாளர் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவி புகாரின் பேரில் பல்கலைக்கழக உள்புகார் குழுவினரும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “புகாரின் பேரில் காவல்துறையினர் உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில், ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலையக் குழுவினருடன் வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உயர் அலுவலர்கள் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.
பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இனி இதுபோல நடக்காமல் இருக்க, பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் பதிவாளர் முனைவர். பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
குற்றம் நடந்தபிறகு பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறுவதை விட, குற்றம் நடக்காமல் பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதுதான் சரியானதாக இருக்கும்.