நிதி நெருக்கடியில் சிக்கித்திணறும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலதன நிதி 346 கோடி ரூபாயில் இருந்து 176 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துணைவேந்தர் இல்லாத ஒன்றரை ஆண்டுகளில் இந்த அளவுக்கு மூலதன நிதியில் கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் பல்கலைக்கழக செயல்பாடுகள் முடங்கும் நிலையில் இருப்பதாகவும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட 3 முன்னோடி பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று. சுதந்திரத்திற்கு பின்பு சிறப்பு சட்ட திருத்தம் மூலம் மாநில பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேல் மாநில பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி திட்டங்கள் பெரிய அளவில் நடைபெறாததால், பல்கலைக்கழக மானிய குழுவின் நிதி 80 சதவீதத்திற்கும் மேல் கிடைக்கவில்லை.
அதே சமயம், தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகிவிட்டதாலும், கலை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததாலும் மாநில பல்கலைக்கழத்திலும் அவற்றின் இணைப்பு கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது. முக்கியமாக உயர்க்கல்வியில் ஆராய்ச்சி வாயிலாக பி.எச்.டி. பெறுவோரின் தகுதி குறைந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் நிரந்தர பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடந்த, 10 ஆண்டுகளில் 465 பேர் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு 95.44 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதற்கான வழக்கில் தமிழக நிதித் துறைச்செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சமீபத்தில் நடந்த ஆட்சி மன்ற குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு பல்கலைக்கழகத்தின் கார்பஸ் பண்ட் எனும் மூலதன நிதியில் இருந்து 170 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 74 கோடி விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்று வகையான நிதி உள்ளது.!
சென்னைப் பல்கலைக் கழகத்துக்கான மூலதன நிதி (கார்பஸ் பண்ட்) 346 கோடி ரூபாய் வரை இருந்தது. அதிலிருந்துதான் தற்போது 174 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. அதே அளவுத் தொகை பல்கலைக்கழகத்தில் சேர்த்து வங்கியில் செலுத்தப்படுகிறது. இவை ஓய்வூதிய நிதியாக தரப்படுகிறது. இந்த நிதியில் இருந்து 73 கோடி ரூபாயை பல்கலைக்கழக நிர்வாகம் செலவு செய்துள்ளதாகவும், இந்த பணம் மீண்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர்கள் அறிஞர்களின் பெயர்களில் நினைவிருக்கை உள்ளது. இதற்காக டெபாசிட் தொகையாக 146 கோடி ரூபாய் உள்ள நிலையில் அதிலிருந்து 2.50 கோடி ரூபாய் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் இத்தகைய போக்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை போன்று சென்னை பல்கலைக்கழகத்தையும் முடமாக்கும் செயல் என கல்வியாளர்கள் வேதனைப்படுகிறார்கள்.