தேசிய திறந்த நிலை பள்ளி
தேசிய திறந்த நிலை பள்ளி PT
தமிழ்நாடு

10th,12th படிப்பு! தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் Vs தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை இடையே நடப்பதென்ன?

PT WEB

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தினால் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கல்வி என்ற நோக்கில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

முழு நேரம் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வினை எழுத இந்நிறுவனம் வழிவகை செய்தது. மேலும், இந்த படிப்பு சிபிஎஸ்இ-க்கு இணையானது எனவும் அறிவித்து செயல்படுத்தி வந்தது.

இதுதொடர்பாக ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூல் பள்ளியின் மூலம் பெறப்பட்ட செகண்டரி ஸ்கூல் எக்ஸாமினேஷன் மற்றும் சீனியர் செகண்டரி ஸ்கூல் எக்ஸாமினேஷன் சான்றுகள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் எஸ்எஸ்எல்சி மற்றும் மேல்நிலை சான்று இணையானது’ என கடந்த 2016 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சான்றிதழை வழங்க கோரி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையிலும், உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அது மனுவுக்கு எதிராக அமைந்தது.

அதாவது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டிருந்த அந்த அரசாணையில், “உயர்கல்வி மன்ற கூட்டத்தின் முடிவின் படி, திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் படித்து 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெறுபவர்களின் கல்வி தகுதியை தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. மேலும் அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்விற்கு அனுமதிக்க முடியாது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து இந்த அரசாணைக்கு எதிராக அரசாணையைத் திரும்பப் பெறக் கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு வெள்ஃபேர் கட்சித் துணைத்தலைவர் ம. முகமது கவுஸ் நம்மிடையே பேசும்போது, “தேசிய திறந்த நிலை பள்ளியின் மூலம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குருகுலம் மற்றும் மதரஸா மாணவர்கள், ஆதரவற்றோர் காப்பங்களில் இருக்கும் குழந்தைகள், பள்ளிப்படிப்பை இடைநீக்கம் செய்த மாணவர்கள் என பலரும் NIOS முறையில் தங்களுடைய பள்ளி படிப்பை தொடர்ந்து கல்லூரி படிப்பை பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெரும் வாய்ப்பை தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு தடுத்து இருக்கிறது.

ஒன்றிய அரசா...? மாநில அரசா...? என்கின்ற அரசியல் போட்டியை கல்வியில் புகுத்தாமல் தமிழ்நாடு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 242 - ஐ உடனே தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்துவோம்” என்றார்.