செய்தியாளர்: ஆறுமுகம்
கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஒம்னி காரில் விருதாச்சலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். அப்பொழுது உளுந்தூர்பேட்டை அருகே காட்டுநெம்பிலி கிராமம் வந்தபோது காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து புகை வந்ததை கண்ட ஓட்டுநர் காரை நிறுத்தி பார்த்தனர்.
அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பற்றிய கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
சிலிண்டர் பொருத்தப்பட்ட ஓம்னி கார் தீப்பிடித்த நிலையில், விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்ட இந்த தீ விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.