தூத்துக்குடி | லாரி மீது கார் மோதிய விபத்து - நீதிபதியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
செய்தியாளர்: T.நவநீத கணேஷ்
தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியான பூர்ணஜெயன் தனது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஆறு பேருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் தூத்துக்குடியில் இருந்து அரியலூர் நோக்கி ஜிப்சம் கொண்டு சென்ற லாரியின் பின்னால் கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நீதிபதி பலத்த காயம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது பாதுகாவலர் அவரது உறவினர் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து காயம் அடைந்த மாவட்ட நீதிபதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.