விஜய் - உதயநிதி Pt web
தமிழ்நாடு

”சட்டப்பேரவையில் முதல்வர் டான்ஸ் மட்டும் தான் ஆடவில்லை” - உதயநிதி விமர்சனம்

சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங் போல மாற்றியிருக்கிறார்கள். அடுத்த சட்டமன்றத்தில் முதல்வர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Premkumar S

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் முழுமையான சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கி ஜூன் 23 வரை நடைபெற்றது. இதில், தவெக அரசு குறித்து பல்வேறு விமர்சங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்த நிலையில், சட்டப்பேரவையில் இறுதி நாளான ஜூன் 23-ம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் ஆளுநரின் உரைக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது, டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்து கட்சி நிதி என்னும் பெயரின் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதை திரும்ப துறைக்கு கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

விஜய்

இதைத்தொடர்ந்து, முதல்வர் ஆதராமின்றி பேசுவதாக திமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, சட்டப்பேரவையில், பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், ’அப்பாவை காணோம்’ என விமர்சனம் செய்ததும், தேர்தல் பரப்புரையின் போது, ஸ்டாலின் செய்த ஆக்சனை செய்ததும், பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் இதற்கு பதிலளித்திருந்த முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், ”நான் மக்கள் மனதில் இருக்கிறேன்” என பதிலளித்திருந்தார். இந்தசூழலில் தான், இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் விஜய் குறித்தும், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”இன்று அமைந்திருக்கக்கூடிய இந்த சோபா மாடல் ஆட்சியுடைய போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் அடித்து, துவைத்து, நொறுங்கிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியுடைய அவலங்கள் எல்லாம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

இன்று, இந்த அரசுடைய தவறுகளை, சறுக்கல்களை எல்லாம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் தட்டிக்கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி தட்டிக்கேட்கிற இளைஞர்களை, நம்முடைய கழகத்தினரை கைது செய்யும் வேலையை இன்று இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆகவே, இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ள நிச்சயம் நமக்கு நிறைய வழக்கறிஞர்கள் தேவை. தூயசக்தி எனக் கூறியவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது எல்லாத்தையும் விட மிகப்பெரிய ஒரு கொடுமையாக சட்டமன்ற ஒழுங்கு சீர்குலைகிறது. இது சட்டமன்றமா? இல்ல சினிமா தியேட்டரா? இல்ல ஏதாவது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டோமான்னு கேக்குற அளவுக்கு இருக்கிறது. இன்றைக்கு, சட்டமன்றத்துடைய தரத்தையே நம்முடைய ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தலைவரை கிண்டல் பண்ணுவதாக நினைத்து முதலமைச்சர், அவரை அவரே இன்னைக்கு எக்ஸ்போஸ் பண்ண ஆரம்பித்திருக்கிறார். இன்னும் அவர் சட்டமன்றத்துல டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த கூட்டத்தொடர்ல நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸும் இருக்கும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு” எனத் தெரிவித்துள்ளார்.