கரூர் கூட்டநெரிசல் குறித்து உதயநிதி ஸ்டாலின்  pt
தமிழ்நாடு

கரூர் கூட்டநெரிசல் சம்பவம்| ”உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்..” - உதயநிதி சொன்னது என்ன?

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துபாயிலிருந்து திரும்பிவந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து பேசினார்.

Rishan Vengai

தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசலில் சிக்கி பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 39 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 51 பேர் சிகிச்சையில் இருந்துவரும் நிலையில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கரூர் தவெக பரப்புரையில் 39 பேர் உயிரிழப்பு சம்பவம்

இந்தசூழலில் இரவே கரூருக்கு புறப்பட்டுச்சென்ற முதல்வர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு சம்பவத்தால் துபாய் சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக திரும்பி வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தார்.

உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்..

கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து, துபாயில் இருந்து உடனடியாக தமிழகம் திரும்பிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்டோருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தசூழலில் இன்று காலை தமிழகம் திரும்பிய அவர், நேராக கரூருக்கு பயணப்பட்டு அங்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் சந்தித்து பேசினார்.

அதற்குபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கரூரில் நேற்று மிக மிக துயரமான சம்பவம் நடந்துள்ளது. அப்படியான துயரச் சம்பவம் கரூரில் நடந்திருக்க கூடாது. நெரிசலில் பல உயிர்களை இழந்திருக்கிறோம். நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அரசு அவர்களுக்கு துணை நிற்கும் என்று பேசினார்.

மேலும் மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை. அதேபோல கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்பு, உரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும் என்று கூறினார். இந்த நேரத்தில் நான் யாரையும் குற்றஞ்சொல்லி அரசியல் பேச விரும்பவில்லை, ஆணையத்தின் விசாரணை வந்தபிறகு உண்மை என்ன என்பது தெரியும் என பேசினார்.