உதயநிதி ஸ்டாலின் - ராஜ்மோகன் web
தமிழ்நாடு

திமுக முன்வைத்த விமர்சனம்.. புள்ளி விவரத்துடன் ராஜ்மோகன் பதிலடி! நடந்தது என்ன?

தவெக அரசின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் குறை இருந்ததாக திமுக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தனது பதிலடியை கொடுத்திருக்கிறார்.

PT WEB

2026-27 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், போக்குவரத்து, மருத்துவம், சமூக நீதி ஆகிய துறைகளுக்கு, முன்பை விட, அதிக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு, முந்தைய ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக திமுக சார்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஸ்

குறிப்பாக, திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் கடைசி பட்ஜெட் வரை, பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு என்பது ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆனால், திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை விட குறைவான நிதியையே, தற்போதைய அரசு இன்று பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்று விமர்சித்தார். மேலும், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம் என்றும், தனது பதிவில் அன்பில் மகேஷ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுகவினரின் இந்த விமர்சனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2025-26 ஆம் நிதியாண்டில், திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், இதில் இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42 ஆயிரத்து 351 கோடி ரூபாய் மட்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்மோகன்

இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் திமுக அறிவிக்கவில்லை என்று விமர்சித்த அவர், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்ததால் தான், இடைக்கால பட்ஜெட்டிற்கே 48 ஆயிரத்து 534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அதாவது, 2025-26 ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது என்று தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

மேலும், வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தனது விளக்கத்தை கொடுத்தார். இதுமட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பாக, நிதித்துறை செயலாளர் அளித்த விளக்கம் தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.