தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் கூட அவர், எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தான், இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தின் தொடக்கத்தில் மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முதலாவதாக தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசி இக்கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. இனிமேல், போலீஸ்காரர்களையும், நடத்துநர்களையும் கூட விசில் அடிக்க வேண்டாமென சொல்லிவிடுவார்கள். தவெக தலைவர் விஜய் யாரை கை காட்டுவாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினராக முடியும்.
தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் ஹீரோவாக விஜயே இருப்பார். எல்லார் கட்சி வீடுகளிலும் தவெகவுக்கான வாக்குகள் இருக்கிறது. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் விஜய். 10 கட்சி கூட்டணியையும், 8 கட்சிக் கூட்டணியையும் வீழ்த்தக்கூடிய ஒரே கட்சி தவெக தான். சாதி மதமற்ற ஒரு சமத்துவ சமூகத்தை தவெக அமைக்கும். விஜய் முதல்வர் ஆவதை எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது. விசில் சின்னத்தை நாம் கவனமாக கையாள வேண்டும்” எனத் தெரிவித்தார்.