தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க மேற்கொள்ள இருக்கும், சுற்றுப்பயண விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டு இருக்கும் நிலையில், விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு பல இடங்களில் காவல்துறை அனுமதி வழங்காமல் இருப்பதாக தவெக குற்றம்சாட்டியிருக்கிறது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் மக்களை சந்திக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், தவெக-வும் தங்கள் முதல் தேர்தல் பரப்புரை பயணத்தை அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் பாராபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைப்பெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் ”விரைவில் உங்களை சந்திக்க உங்கள் பகுதிக்கு நான் வருகிறேன்” எனக் கூறியிருந்தார். மாநாட்டிற்கு பிறகு, விஜய் தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி வந்தன. இத்தகைய சூழலில்தான், விஜயின் சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தவெக மாநிலப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டிருக்கிறார்.
என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13 சனிக்கிழமை முதல் டிசம்பர் 20 சனிக்கிழமை வரை தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாகவும் தொடர்ந்து, விஜய் பரப்புரை செய்யும் இடங்களில் அதிகம் கூட்டம் கூடும் என்பதால், உரிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது பரப்புரை பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, ஒரு வார இடைவெளியில் சனிக்கிழமை மட்டுமே விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் கோயம்புத்தூர் பரப்புரை பயணம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் பல இடங்களில் பாதுகாப்பு காரணங்கள் எனக்கூறி காவல்துறை அனுமதி வழங்காமல் இருப்பதாக தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு காவல்துறை அனுமதி வழங்க கோரி இன்று, தவெக பொதுசெயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொது செயலாளர் சி டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தப் பின்னர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 13ஆம் தேதி மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் தொடர்பாக கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி பெரம்பலூர் அரியலூர் எஸ்பி காவலர்களிடம் கடிதம் கொடுத்திருந்தார்.
ஆனால், தற்போது வரை எந்த இடத்திற்கும் காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்படவில்லை. எல்லா தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்; எல்லா கட்சியினரும் மேற்கொள்கிறார்கள். எல்லாருக்கும் கிடைக்க கூடிய அனுமதி எங்களுக்கு கிடைப்பதில்லை.. அதனால்தான் சுற்றுப்பயணம் தொடர்பான மொத்தம் விவரமும் டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.