அர்லேகர், விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சி.ஜோசப் விஜய் எனும் நான்.. முதல்வராக பதவியேற்பு.. ஆர்ப்பரித்த தொண்டர்கள்..

இன்னொரு புறம், அவருடைய பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அதைத் தொடர்ந்து, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Prakash J

விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு முதலில் பதவிப் பிரமாணமும், அதன்பிறகு ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. அப்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விஜய் பிரமாணத்தை வாசித்தது கவனிக்கத்தக்கது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றபோதும் அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைத் தாண்டி 120 இடங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று இரவு 4-ஆவது முறையாகச் சந்தித்து, ஆதரவுக் கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

விஜயுடன் பிற கட்சித் தலைவர்களும் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, சென்னை ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அவரது பதவியேற்பு விழாவைக் காண, முக்கிய தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காலை முதலே அரங்கிற்கு வந்தனர். அதேபோல், அரங்கிற்கு வந்த விஜயை, அரசு அதிகாரிகள் பூங்கொத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அரங்கிற்கு வந்த பொறுப்பு ஆளுநர் அர்லேகரை வரவேற்ற விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை போர்த்தினார்.

பின்னர் மேடையேறிய ஆளுநரிடம், பதவியேற்கக்கூடிய அமைச்சர்கள் யார்யார் என்பதை விஜய் ஆளுநரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதைத் தொடர்ந்து, வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு முதலில் பதவிப் பிரமாணமும், அதன்பிறகு ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. அப்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விஜய் பிரமாணத்தை வாசித்தது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடைய பதவியேற்பு விழாவைக் கண்டுகளித்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இன்னொரு புறம், அவருடைய பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அதைத் தொடர்ந்து, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.