செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீராசாமி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானது.
இந்த வீடியோ குறித்தும், தன் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாருக்கும் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். திமுகவின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டு பொய்யான வீடியோவை பரப்பி, தன் மீதும் தன் கட்சியின் மீதும் அவதூறு ஏற்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி. தொடர்ந்து, தனது நண்பரான நவீன் என்பவர், கைமாற்றாக அவசரத்திற்குப் பணம் வாங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். அவ்வாறு வாங்கிய கடனை அவர் இரு தவணைகளாகத் திருப்பிக் கொடுத்ததாகவும் இந்த அவதூறு பரப்புரைக்கு முழு காரணம் அரசியல் சதிதான் என்றும் வீராசாமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், வீராசாமி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கட்சியில் இருந்து வீராசாமி நீக்கப்பட்ட நிலையில், அவர் நண்பர் என்று குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் நவீன் தாழம்பூர் காவல் நிலையத்தில் வீராசாமி தன்னை மிரட்டி பணம் கேட்டதாக புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் துணை ஆணையர் ரகுபதி உத்தரவின் பேரில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து வழக்கு பதிவு செய்து வீராவை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.