ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரிக்கட்டும்.. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது தமிழக அரசு!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங். இவர், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்பூர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்போதைய திமுக ஆட்சியில் ஒரு கட்சித் தலைவருக்கு பாதுகாக்க முடியாத நிலை இருப்பதாகவும் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் தான், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் புலன் விசாரணையை தமிழ்நாடு காவல்துறை நியாயமாக மேற்கொள்ளவில்லை. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் புலன்விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் இமானுவேல். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது.
இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்கப்படுவதாகவும் அவர்கள் வழக்கின் சாட்சியங்களை அழிக்க முற்படுவதாகவும் கூறி ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் தமிழக காவல்துறை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்று தமிழகத்தில் புதிதாக ஆட்சியை அமைத்த நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் தற்போதைய நிலைபாடு என்ன? சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்பது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படியும் தமிழக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தது. இதனைத்தொடர்ந்து ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ.க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என்றும் அந்த மனுவை திரும்ப பெறுவதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. புலன்விசாரணை செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது தெளிவாகிறது.

