‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து சோளிங்கர் எம்எல்ஏ கபில் செய்தியாளரை தாக்க முயன்றதாக வீடியோ சர்ச்சை வெடித்தது. பின்னர், செய்தியாளர் கடைக்குச் சென்று வாக்குவாதம், செல்போன் பறிப்பு, திட்டல் ஆகியவை நடந்ததாக புகார். பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாட, பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கபில் மற்றும் தம்பி தனஞ்செழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்து வெளிவந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து கடந்த மாதம் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனைத் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில், படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, கேள்வி எழுப்பிய செய்தியாளரை தாக்க முற்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த செய்தியாளரை அடையாளம் கண்ட எம்எல்ஏ கபில், தனது தம்பி தனஞ்செழியன் மற்றும் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் அவரது கடைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த செய்தியாளர்களான அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் அங்கு சென்று, நடைபெற்ற சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இதனைப் பார்த்த எம்எல்ஏ கபில், செய்தியாளர் அரங்கநாதனின் செல்போனைப் பிடுங்கியதுடன், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகார் அளிக்கப்பட்டும் எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட செய்தியாளர் சோளிங்கர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இந்நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவரது தம்பி தனஞ்செழியன் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக அரசின் 100 நாள் சாதனைகள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அக்கட்சயின் எம்.எல்.ஏ மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர