தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் - ஜோதிமணி - கனிமொழி file photo / x
தமிழ்நாடு

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. தவெக MLA மீது குற்றச்சாட்டு! கனிமொழி, ஜோதிமணி கண்டனம்!

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அதற்கு அரசியல் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.

Rishan Vengai

பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கண்டித்து கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் கனிமொழி, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?

முதலமைச்சர் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" என பதிவிட்டுள்ளார்.

ஜோதிமணி அவருடைய எக்ஸ்தள பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு த வெ க சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது அறிவு, திறமை, உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களில் ஏறக்குறைய 50% பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு,திறமை,நிர்வாகத்திறன் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், கள்ளக்குறிச்சி த. வெ க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாவட்ட ஆட்சியரான பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

மேலும், பட்டாசு வெடிக்கக் கூடாது எனக் கூறிய காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சம்பவங்களை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன்

மக்களின் உரிமைகள் குறித்துப் பேசச் சென்றவர்களை துணை சபாநாயகர் அடித்துத் துன்புறுத்தியதாகவும், பின்னர் மிரட்டி அப்படி எதுவும் நடைபெறவில்லை எனப் பேச வைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

இத்தகைய சம்பவங்கள் அனைத்தையும் மக்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இதற்கெல்லாம் இனியாவது மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.