தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் தற்போது துவங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 3 மாதங்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுகளையும் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தார்.
கட்சியின் தலைவர் விஜய் விரைவில் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என கூறியிருந்தநிலையில் இந்த நியமனங்கள் தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டு அல்லது மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 105 முதல் 110 மாவட்ட செயலாளர்களை கட்சி சார்பில் நியமனம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதற்கான, வரையறையும் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ள நபர்கள் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படவில்லை என்றால் கட்சியில் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படுத்த கூடாது என்பது தொடர்பாகவும், நியமனம் செய்யப்படும் நபர்கள் மாவட்டங்களில் கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை எப்படி நியமனம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் வேறு கட்சியில் இருந்து வந்து தவெகவில் புதிதாக சேர்ந்த நபர்களுக்கும், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து செயல்பட்டு வரும் நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டு வருவதால் இதை சரி செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்ட உள்ள நபர்கள் இன்று இறுதி செய்யப்பட உள்ளனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் இன்று கட்சி அலுவலகத்தில் உள்ள நிலையில் அவர்களிடம் பேசி ஒரு மனதாக மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. இறுதி செய்யப்படும் மாவட்ட செயலாளர்களை அறிவிப்பு வெளியாகும் முன் தனி தனியாக சிந்திக்கிறார் விஜய்.