வெயிலில் கதறி அழுத குழந்தைகள்.. வெளியே வர முடியாமல் தவித்த பெற்றோர்! முகநூல்
தமிழ்நாடு

தவெக மாநாடு | வெயிலில் கதறி அழுத குழந்தைகள்.. வெளியே வர முடியாமல் தவித்த பெற்றோர்! நடப்பது என்ன?

கா்ப்பிணிப் பெண்கள் கைககுழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் முதியவர்கள், உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறார்கள். மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்த படியே மாநாட்டை பார்க்குமாறு கேடுக்கொண்டார் தவெக தலைவர் விஜய்.

Vaijayanthi S

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ளநிலையில், அங்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களும் குழந்தைகளும் வெயில் தாங்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றே குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தவெக மாநாட்டிற்கு குழந்தைகளுடன் வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கொளுத்திய வெயிலில் ஒதுங்குவதற்கு சிறிது நிழல்கூட இல்லாததால் பல குழந்தைகள் வீரிட்டு அழுதன. ஒரு ஆர்வத்தில் குழந்தைகளுடன் வந்துவிட்டாலும், அவை அழுவதை பார்த்த பெற்றோர் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால், தடுப்புகளையும், அங்கு கூடியிருந்த கூட்டத்தையும் கடந்து வெளியே செல்வது இயலாத காரியமாக மாறியது.

அழும் குழந்தைகள்

குழந்தைகளின் அழுகுரல் ஒருபுறம், அதனை சமாதானம் செய்ய முடியாமல் பரிதவித்த பெற்றோர் மறுபுறம் என அசாதாரண சூழல் உருவாகியது. அதனையடுத்து, தவெக தொண்டர்கள், மருத்துவக்குழுவினர் தடுப்புகளை தாண்டி குழந்தைகளை வெளியே வாங்கினர். குழந்தைகளை வெளியே கொண்டுவந்தாலும், அவற்றின் பெற்றோர் வெளியே வருவதில் சிக்கல் நீடித்தது.

அதனால், முதலில் குழந்தைகளை சமாதானப்படுத்தியவர்கள், பிறகு இருக்கைகளை ஒன்றன் மீது ஒன்றாக போட்டு பெற்றோரை தடுப்புகளை தாண்டி வர வைத்தனர். சிலர் குழந்தைகளை மட்டும் ஒப்படைத்து விட்டு, பின்னர் கூட்டத்தை கடந்து வெளியே வந்தனர். குழந்தைகளுடன் வந்தவர்களை மாநாட்டு திடல் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் இது போன்ற அசாதாரண சூழலை தடுத்திருக்கலாம்.

தவெக அறிக்கை

ஆனால் கடந்த 18ஆம் தேதியே குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தவெக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது,” நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது.

மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன் பேராதரவும் தேர்தல் அரசியல் கவனத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக இலக்கை எட்ட புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள். இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.

அழும் குழந்தைகள்

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கா்ப்பிணிப் பெண்கள் கைககுழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் முதியவர்கள், உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறார்கள். மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம். நகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டிய நமது தலையாய கடமை.

அழும் குழந்தைகள்

மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்” என்று குறிப்பிட்டிருந்தது..