தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற முக்கிய பிரச்சினைகள் பலவற்றை மையமிட்டு விஜயின் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. லாக்கப் மரணத்தில் தொடங்கி மீனவர் பிரச்சினை வரை என்னவெல்லாம் தீர்மானமாக மாற உள்ளது தெரியுமா?...
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி நடக்கும் மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார். அவரது வியூகம் என்ன?... எதிர்க்கட்சிகள் குறித்து எத்தனை வார்த்தைகள் பேசுவார்?... கொள்கை விளக்கம் என்ன?... மக்களைக் கவரும் அறிவிப்புகள் என்ன?... குறிப்பாக மக்களோடு மக்களாக நிற்க விஜய் இந்த மாநாட்டை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார் என்பதுதான் அனைவரது கேள்வியாக உள்ளது. இவை அனைத்துக்கும் விஜயின் பேச்சே தீர்வு என்றாலும், மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த புதிய தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 10க்கும் குறையாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக இருப்பது நாடாளுமன்றத்தை பல நாட்களாக முடக்கிய தேர்தல் ஆணையத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை. அண்மையில் பிஹாரில் நிறைவேற்றப்பட்ட இந்த நடைமுறை மக்களின் குடியுரிமையை சந்தேகிப்பதாகவும், மத்திய அரசின் நடவடிக்கையை இதன் மூலம் தேர்தல் ஆணையம் பிரதிபலிப்பதாகவும் பிரதான தேசிய கட்சிகள் குற்றஞ்சாட்டிய எஸ்.ஐ.ஆர். விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார் விஜய். இந்த எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக தவெக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கடுத்தபடியாக தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தூய்மை பணியாளர்கள் போராட்டம். குப்பைகளை அள்ள ஆட்கள் வராததால் பெரும் பிரச்சினையாக உருவெடுத்த தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், போராட்டக்காரர்கள் கைதுக்குப் பின்னர் பெரும் கவனம் பெற்றது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கோயில் காவலாளி அஜித் மரணத்தால் மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளான லாக்கப் மரண விவகாரம். இந்த விவகாரம் நடந்த போதே விஜய் ரியாக்ட் செய்திருந்தார். இந்நிலையில், லாக்கப் டெத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழகத்தில் காலம்காலமாக இருந்து அவ்வப்போது போராட்டங்கள் வாயிலாக தலைதூக்கி பார்க்கும் சில பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றுவது, நெசவாளர்கள் விவகாரம், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு, இலங்கை மீனவர்கள் பிரச்சனை ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது.
கவின் ஆணவக் கொலை பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அது குறித்து மாநாட்டில் விஜய் ஏதாவது பேசுவாரா? அல்லது தீர்மானம் ஏதும் நிறைவேறுமா என தவெகவினர் சிலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பார்க்கலாம்... வரலாற்று நிகழ்வாக அறிவித்திருக்கும் தவெக மாநாட்டில் என்ன தீர்மானங்கள் எல்லாம் வரலாற்றில் இடம்பெறும் என்று வெயிட் பண்ணி பார்ப்போம்..