விஜய் X
தமிழ்நாடு

”திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி” - தவெக தலைமை நிலைய அறிவிப்பு!

திருச்சியில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

Premkumar S

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், பெரம்பூரில் 1,20,365 வாக்குகளும் , திருச்சி கிழக்கில் 91,381 வாக்குகளும் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். இந்தசூழலில் தான், பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கிறார்.

திராவிட கட்சிகளுக்கு திருப்புமுனை மாவட்டமாக திருச்சி பார்க்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி கிழக்கு உட்பட மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 6-ல் தவெக இம்முறை வென்றிருக்கிறது. இந்தசூழலில் தான், திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார். முதல்வராக பதவியேற்றப்பின் முதல்வர் விஜயின் முதல் திருச்சி பயணம் இதுவாகும்.

விஜயின் திருச்சி பரப்புரை

முதல்வர் விஜய் திருச்சி செல்வதை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை பறக்க விட்டால் உரிய நடவடிக்கை எடுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தசூழலில், முதல்வரின் கூட்டம் நடைபெறவுள்ள திருச்சி தூய வளனார் கல்லூரி மைதனாத்தின் ஏற்பாடுகளை அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த் நேற்று பார்வையிட்டார்.

இதையடுத்து, திருச்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தவெக வெளியிட்டிருக்கிறது. அதில், ”தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகிகள் சந்திப்பு

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும். QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.