TVK leader Vijay campaign  Karaikudi Vijay campaign
தமிழ்நாடு

தாமதமாக வந்த விஜய்.. 4 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்.. சீமானின் களத்தில் TVK-வுக்கு ஏமாற்றம்!

காரைக்குடி பிரசார நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசாமல் திரும்பச் சென்றுள்ளது அவரின் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

விஜயின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை உரிய அனுமதி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தவெகவினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு விஜய் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், பாதுகாப்பு காரணமாக அது பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கும் தமிழக காவல்துறையையே தவெக நிர்வாகிகள் காரணமாகக் கூறினர். அதேபோல், சென்னையில் பரப்புரை மேற்கொள்ள அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தவெக தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, பிரதான கட்சித் தலைவர்கள் நாள்தோறும் குறைந்தது 2 அல்லது மூன்று இடங்களில் பரப்புரை செய்துவரும் நிலையில், ஒவ்வொரு பிரசாரத்திற்கும் இடையே நாள் கணக்கில் விஜய் இடைவெளி விடுவதும் அரசியல் வட்டாரத்தில் விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது.

தற்போதுவரை திருச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் விஜய் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். வரும் வழியில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த, அவர் சைக்கிளிலும் பயணம் செய்தார். இதனிடையே மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் காரைக்குடியில் அவர் பேச திட்டமிட்ட இடத்துக்கு அவர் வருகை தந்தார். காரைக்குடியில் திட்டமிட்ட இடத்தில் பிற்பகல் 2.30 மணி வரை பரப்புரை மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த இடத்தில் அவரைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாக வந்ததால், அவர் தொண்டர்களிடையே உரையாற்றாமல் விசில் சின்னத்தை மட்டும் காண்பித்துவிட்டுத் திரும்பச் சென்றுள்ளார்.

காலை 10 மணியில் இருந்து சுமார நான்கு மணி நேரத்திற்கு மேலாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், விஜயின் பேச்சை கேப்பதற்காக தொண்டர்கள் காத்திருந்த நிலையில், அவர் பேசாமல் திரும்பச் சென்றது அவரின் தொண்டர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தில் அவர் நுழைந்த பின்னர், தனது தொண்டர்களை நீண்டநேரம் காத்திருக்க வைப்பதாகவும், உரிய நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவதாகவும் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மீண்டும் தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் அவர், காரைக்குடி பிரசார நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.