தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர்(98.82%), ஈரோடு (97.98%), திருப்பூர்(97.53%) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன. இதையடுத்து, தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜயும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே, மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2023ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அதில், சான்றிதழும், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கியிருந்தார். இதேபோல் கடந்த ஆண்டும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தியிருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.