திருவாரூர் பரப்புரையில் விஜய் எக்ஸ்
தமிழ்நாடு

தவெக பரப்புரை| ’திருவாரூர் மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார்..’ நேரடியாக விமர்சித்த விஜய்!

நாகப்பட்டினத்தை தொடர்ந்து திருவாரூரில் பரப்புரையில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய் திமுக-வை கடுமையாக விமர்சித்து பேசினார்.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கிருக்கும் நிலையில், முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், செப்டம்பர் 13 ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் சென்றார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்ற அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருவாரூர் பரப்புரையில் விஜய்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்ட தவெக தலைவர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது தவெக தொண்டர்கள் விஜயின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்து கொண்டு விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். மேலும் பரிசுகளையும் வழங்கினர். இதனால், தவெக பரப்புரை வாகனம் மெதுவாக நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் திருவாரூரில் பரப்புரை நடத்தவிருந்த கமலாலய தெப்பக்குள பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர், பச்சை நிற துண்டுடன் பரப்புரை வாகனத்தின் மீதேறிய தவெக விஜய் அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.

திருவாரூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “ திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோவில் ஆழி தேர் தான் ஞாபகத்துக்கு வரும். ரொம்ப வருமாக ஓடாத இந்த ஆழி தேரை ஓட்டுனது நான் தான்னு சொன்னது யாருன்னு சொன்னது யாருன்னு உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் மகன் நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்கிற தேரை ஓட விடாம நாலா பக்கமும் கட்டைய போட்டு நிப்பாடி இருக்காரு... முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த மாவட்டம் என்று சொல்ற இந்த திருவாரூர் கருவாடா தேயுது அத கண்டுக்க மாட்றாங்க” எனப் பேசினார்.

திருவாரூர் பரப்புரையில் விஜய்

தொடர்ந்து, ஆளும் திமுக அரசை கேள்வி எழுப்பிய விஜய், “திருவாரூரில் அடிப்படை வசதி சரியாக இல்லை , நாகப்பட்டினம் போலவே அதிகப்படியான குடிசைப்பகுதிகள் இருக்ககூடிய இடமாகவும் திருவாரூர் இருக்கிறது எனப்பேசிய அவர், அங்கிருந்த தொண்டர்களிடம் திருவாரூர் அடிப்படை வசதிகள் குறித்தான கேள்விகளை எழுப்பினார்.

விவசாயிகள் சொன்னது...

தொடர்ந்து பேசியவர், திருவாரூரில் ஒரு மந்திரி இருக்கிறார் அவரின் பணி ஸ்டாலின் குடும்பத்துக்கு சேவை செய்வது எனக்கூறிய அவர். இந்த ஊரில் ஒரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டையை ஏற்றுவதற்கு இறக்குவதற்கும் 40 ரூபாய் கமிஷன் வாங்கப்படுகிறது. ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கமிஷன். கணக்கு போட்டு பார்த்தால் 4 வருஷத்துல பல கோடி ரூபாய்கள் புடுங்கப்பட்டிருக்கிறது. இது யார் சொன்னாலும் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் சொன்னது விவசாயிகள். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டாங்க என்று பேசினார். தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து பேசிய அவர், “உங்களுக்கு வேணும்னா நாற்பதுக்கு நாற்பது வெறும் வெற்றியா இருக்கலாம்; ஆனால் விவசாயிகளுக்கு அவங்க வயித்துல அடிச்சு வாங்குன கமிஷன்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் மீது வைக்கப்படும் விமர்சனமான கூட்டம் ஓட்டாக மாறாது என்ற விமர்சனத்தை மக்களிடம் தெரிவித்தார்.