விஜய் pt
தமிழ்நாடு

பெரம்பூர், திருச்சி கிழக்கு | 2 தொகுதிகளில் விஜய் போட்டி.. 234 தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் நிலையில், இன்று தவெக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

Rishan Vengai

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நுங்கம்பாக்கத்தில் வெளியிட்டது. ஸ்டாலின் கூட்டணிக்கும், மக்கள் கூட்டணியான தவெகக்கும் இடையேயான இருமுனை போட்டி என விஜய் வலியுறுத்தி, 2 தொகுதிகளில் தானும் நேரடியாக களமிறங்குவதாக அறிவித்தார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.

திமுக - அதிமுக, ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமி

ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தசூழலில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய்

அந்தவகையில் முதல்முறையாக மக்கள் தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய்..

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு முன் பேசிய விஜய், “மக்களுக்கான நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்து நிற்கிறேன். 4 முனை போட்டி, 40 முனை போட்டி என என்ன சொன்னாலும், இந்த தேர்தல் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும், மக்கள் கூட்டணியான நமக்கும் இடையேயான இருமுனை போட்டி மட்டுமே. மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா அல்லது மக்களை நேசிக்கும் இந்த விஜய் வேண்டுமா. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள்தான் எம்எல்ஏ ஆனாங்க என்ற செய்தி மே 4-ஆம் தேதி உலக சாதனையாக இருக்க வேண்டும், தயவுசெய்து உங்கள் தவெகவிற்கு ஓட்டு அளியுங்கள்” என பேசினார்.

மேலும் முதற்கட்டமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட 10 தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டார்.

தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த விஜய், முதல் தொகுதியாக பெரம்பூரை அறிவித்து ஜோசப் விஜய் என தெரிவித்தார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை வாசித்த அவர், அதிலும் தானே போட்டியிடுவதாக ஜோசப் விஜய் என அறிவித்தார். மற்ற முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த் தி.நகரிலும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கத்திலும், செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வி.எஸ்.பாபு போட்டியிடுகின்றனர்.