பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தவெக தலைவர் விஜய், தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அதிரடி காட்டி வரும் விஜய், மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று சென்ற விஜய், மாவட்டப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளே சென்றபோது, கையில் பெரிய லிஸ்ட்டையே வைத்திருந்த அவர், தேர்வு செய்யப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களை தனித்தனியாக வைத்து நேர்காணல் நடத்தினார். ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களோடும், 20 நிமிடம் வீதத்திற்கு ஆலோசனை நடத்திய விஜய், கட்சியின் முன்னேற்றப் பணிகள், அந்தந்த மாவட்ட பிரச்னைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட் ஆகியோரை வெளியே அனுப்பிவிட்டு, தனி அறையில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் நியமன விவகாரத்தில், பணம் கேட்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டால் டென்ஷனான விஜய், “இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். கடுமையான நடவடிக்கை பாயும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படி, தொடர் ஆலோசனைக்குப் பிறகு இன்று மாலை முதற்கட்ட மாவட்டச் செயலாளர் பட்டியல் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய்யை தனி அறையில் சந்தித்து பேசிய நிர்வாகிகள், எந்த தயக்கமும் இன்றி, தாங்கள் சந்திக்கும் சவால்கள், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சுதந்திரமாக பகிர்ந்துகொண்டதாக தெரிகிறது. குறிப்பாக, ஆனந்த் மீது விமர்சனம் குற்றச்சாட்டு இருந்தால் அதையும் தயக்கமின்றி பேசியதாக தெரிகிறது. சுமார் 30 நிமிட ஆலோசனைக்குப் பிறகு, தேர்வாகும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஆணையை கொடுத்து வாழ்த்து கூறி அனுப்பிவைத்துள்ளார். அனைவருக்கும் வெள்ளி நாணயமும் விஜய் வழங்கியுள்ளார்.
விஜய் வழங்கியுள்ள ஆணையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கழக பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் விதமாக, கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மொத்தம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கு 1 மாவட்டச் செயலாளர் என்ற வீதத்தில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கிறார் விஜய்.
இம்மாத இறுதிக்குள் மாவட்டச் செயலாளர்கள் அனைவர் பற்றிய விவரமும் அடங்கிய பட்டியல் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு பனையூரில் தொடர் ஆலோசனை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.