2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் என்.ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் மதியழகன் உள்ளிட்டோரை டெல்லிக்கு நேரில் அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
தொடர்ந்து, 2ஆம் கட்ட சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிஐ உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி, விஜய் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகியிருந்த நிலையில், 2 நாட்கள் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதல் நாள் விசாரணை 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், பொங்கலை முன்னிட்டு விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய தவெகவின் வேண்டுகோளை ஏற்று 2வது நாள் விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு சிபிஐ தள்ளி வைத்தது. அதன்படி இன்று, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான 2ஆவது நாள் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னதாக, இன்றைய (ஜனவரி 19) சிபிஐ விசாரணையில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு தனிவிமானம் மூலம் சென்ற விஜய், தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இதனையடுத்து, இன்று கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணக்கு ஆஜராகியிருக்கிறார்.
தொடர்ந்து, இன்றுடன் தவெக தலைவர் விஜயிடம் விசாரணையை நிறைவு செய்ய சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.