என்டிஏ கூட்டணியில் அமமுக, தேமுதிக இணையுமா?., பதிலளித்த நயினார் நாகேந்திரன்.!
பாஜக தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற உள்ள நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக முக்கிய தலைவர்கள் எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று, சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லியில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமமுக தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாட்டில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள கூட்டத்தில் தேமுதிக மற்றும் அமமுக ஆகியவை அதிமுக கூட்டணியில் இணைகிறதா? என்ற கேள்விக்கு விடை தெரியும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக திட்டங்களை அதிமுக காப்பி அடிப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், அதிமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததாகவும் தற்போது, மேலும் 500 ரூபாய் சேர்த்து 2000 தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அந்த அறிவிப்பு திமுகவின் திட்டங்களை காப்பி அடித்ததாக கருத முடியாது என்று அவர் பதில் அளித்தார்.

