மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்ய உள்ளது. தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறுமா என மக்கள் எதிர்பார்போடு காத்திருக்கின்றனர். புதிய பொருளாதாரப் பாதையில் தடம் பதிக்க இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்புகள், திட்டங்கள் இருக்குமா என்று தொழில்துறையினர் எதிர்பார்கின்றனர்.
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவுள்ளார். இது, 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையாக அமையவுள்ளது. ’வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்’ என திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அவற்றை ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டுத் திட்டமென பிரித்துச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தொடக்கமாக இந்த நிதிநிலை அறிக்கை அமையவிருக்கிறது.
மகளிர் தொழில் தொடங்க சுய உதவி குழுக்கள் மூலம் 5 லட்சம் ரூபாய் கடன் வழங்குவது, சென்னை அருகே பல்வகை விளையாட்டு வளாகம் அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு 5 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யவும், தவெக அரசு திட்டமிட்டுள்ளது. மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அதனை 1,500 ரூபாய், 2,000 ரூபாய், 2,500 ரூபாய் என மூன்று விதமாக செயல்படுத்துவதற்கான ஆவணங்கள், முதல்வர் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு திட்டத்தை முதல்வர் இறுதிசெய்து, 110 விதியின் கீழ் அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.