Vijay - Anand Pt web
தமிழ்நாடு

புதுவை MLA to தமிழ்நாடு அமைச்சர்.. என்.ஆனந்தின் அசுர வளர்ச்சி!

புதுச்சேரியில் இருந்த ஒரு சிறு தொகுதி MLAவாக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, தற்போது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தின் அரசியல் வெற்றி என்பதை பலரையும் மலைக்க வைக்க கூடியதாக விளங்குகிறது.

Praveen Joshva L

கடந்த 2005-ஆம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸின் முக்கிய முகமாக திகழ்ந்த பி. கண்ணன் அக்கட்சியில் இருந்து விலகி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அப்போது புதுச்சேரியில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்ற பல தொழில்களையும் நடத்தி வந்த ஆனந்த் பி.கண்ணன் அவர்களின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியின் புஸ்ஸி தொகுதியில் ஆனந்த்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் அபார வெற்றிபெற்ற நிலையில், அதில் இருந்து அவரின் பெயர் புஸ்ஸி ஆனந்த் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

அதன் பின்னர் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உப்பளம் தொகுதியில் சுயேர்ச்சையாக போட்டியிட்ட ஆனந்த் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து NR காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலமாக விஜயுடன் இவருக்கு அறிமுகம் கிடைத்த நிலையில் அதன் மூலம் விஜய்யின் நற்பணி இயக்கத்தில் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார்.

இது விஜயின் கவனத்தை ஈர்த்த நிலையில், 2009-ஆம் ஆண்டு தனது நற்பணி மன்றங்களை ஒருங்கிணைத்து விஜய் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்து விஜயின் நிழல் என்று சொல்லும் வகையில் அவருக்கு நெருக்கமானவராக உருவாகியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்கள் அனைத்திலும் முதன்மை வாய்ந்த நபராக இருந்த ஆனந்த், விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் முன்னணியில் திகழ்ந்த ஆனந்த் பலமுறை சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புஸ்ஸி ஆனந்த் தனது மகனைச் சுற்றி ஒரு தடுப்புச் சுவரைப் போல இருக்கிறார் என்றும், விஜயை பார்க்க விடாமல் என்னை தடுத்தார் என்று ஊடகங்களிலும் பகிரங்கமாக விமர்சித்தது பெரும் விவாதமாக மாறியது. இப்படி தவெகவை அடிமட்டத்தில் இருந்து உருவாக்கிய ஆனந்த் சென்னையில் உள்ள தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட்டு, திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் அமைச்சராகவும் அவர் பதவியேற்றுள்ளது இந்திய அளவில் கவனிக்கத்தக்கதாக உருவாகியுள்ளது.