31ஆவது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில், தென்மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வந்திருந்தது. அதேசமயம், எதிர்க்கட்சியான திமுக நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என கேட்டு வருகிறது.
இந்தசூழலில் தான், இன்று நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் விஜய், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தக் காரணத்தைக் கொண்டும் குறையாத வகையில் சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டமன்றத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என அதாவது No Delimitation என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என அதாவது Fair Delimitation என முதல்வர் விஜயின் பேச்சு சர்ச்சையானது.
இதையடுத்து, பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த சம்பவம் தொடர்பாக விமர்சித்து வரும் நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் நிர்மல்குமார், ”தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தான், தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுவதாக தவெக ஐடிவிங் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் முதலமைச்சரால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள். தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆக. 12இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது.
அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி அன்றே பிரதமருக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.