தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் திருச்சி, இதுவரை ஆண்ட கட்சிகள் அனைத்துக்குமே இதயமாகத் திகழ்ந்த மாநகரம். இங்கு மாநாடு நடத்துவது என்பது வெறும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, அது ஒரு கட்சியின் வலிமையையும், தமிழகம் முழுவதும் அதன் செல்வாக்கையும் வெளிப்படுத்தும் ஒரு பிரகடனம். 1920களிலேயே காங்கிரஸ் மாநாடு நடந்த ஊர் திருச்சி. 1967இல் ஆட்சிப் பொறுப்பை இழந்த பிறகு காமராஜர் நடத்திய முதல் மாநாடும் அன்றைய திருச்சி மாவட்டம் கரூரிலேயே நடந்தது.
தமிழ்நாட்டின் புவியியல் மையமான திருச்சி, திராவிட இயக்க வரலாற்றிலும் ஆழமாகப் பதிந்த ஒரு நகரம். திமுக தனது வரலாற்றில் அதிக மாநில மாநாடுகளை திருச்சியில்தான் நடத்தியுள்ளது. 1956ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் திருச்சியில் நடந்த 2வது மாநில மாநாட்டில்தான் திமுக தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என ஜனநாயக வாக்கெடுப்பை நடத்தினார் அண்ணா. அதன் பிறகே தேர்தல் அரசியலில் நுழைந்தது திமுக. அதனால்தான், "திருச்சி என்றாலே, திருப்புமுனைதான்" என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி இன்றைய முதல்வர் ஸ்டாலின் வரை கூறுகிறார்கள்.
அதிமுகவுக்கும் திருச்சிக்கும்கூட ஆத்மார்த்தமான தொடர்புண்டு. தமிழ்நாட்டில் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றவிரும்பினார் எம்ஜிஆர். 1981-82காலகட்டத்தில் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட கடுமையான குடிநீர் பற்றாக்குறை, அவரது இந்தயோசனைக்கு வலு சேர்த்தது. குடிநீர் நிவாரண நடவடிக்கைகளுக்குச் செலவிடப்படும் கோடிக்கணக்கான நிதியை, புதிய தலைநகரைக் கட்டப்பயன்படுத்தலாம் என்றவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் அரசியல் வாரிசான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் திருச்சி மீது தனி அன்பு இருந்தது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம்தான் எனது பூர்வீகம் என்ற ஜெயலலிதா, ”ஸ்ரீரங்கத்துக்கு நான் வந்து செல்வது, எனது சொந்த வீட்டுக்கு வந்து செல்வது போன்ற உணர்வைத் தருகிறது" என அடிக்கடி கூறியதுண்டு. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றிபெற்றார் அவர்.
இந்த வரலாற்றுப் புரிதலுடன்தான் தமிழக வெற்றிக் கழகம் திருச்சியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியினர். தனது முதல் அரசியல் மாநாட்டை வடதமிழகத்தின் விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநாட்டை தென் தமிழகத்தின் மதுரையிலும் நடத்தி முடித்த விஜய், சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டின் இதயமான திருச்சியில் இருந்து தொடங்கவிருக்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வெவ்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு மூன்று மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் அவரது சுற்றுப்பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் அவரது சுற்றுப்பயணம் நிறைவு பெறுகிறது.
திருச்சி தமிழகத்தின் மைய மாவட்டம் என்பது மட்டும் விஜய் அதனைத் தேர்ந்தெடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்தாலும் சிறு மோதல்கூட நிகழாத மதநல்லிணக்க நகர் திருச்சி. தனக்கு எல்லா மதத்தினரின் ஆதரவும் வேண்டும் என்பதற்காகவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமது சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கான நகராக திருச்சியைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்கள் அவர்கள்.
கூடவே, டெல்டா மாவட்ட அரசியலையும் கையிலெடுக்கும் விஜய், உள்ளூர் பிரச்சினைகளுக்கும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என்பது தவெகவினரின் எதிர்பார்ப்பு. கூடவே, உள்ளூர் அமைச்சர்களை கடுமையாக விமர்சிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் தவெகவினர்.
செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாள், 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாள். இதையொட்டி திமுக வருகிற 15ஆம் தேதி கரூரில் முப்பெரும் விழா நடத்தவிருக்கிறது. அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே அதாவது 13ஆம்தேதி, திருச்சியிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் விஜய். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடர்கழகம், திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த டெல்டா மாவட்டம், தமிழக வெற்றிக்கழகத்துக்கு எந்த இடத்தைத் தரப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறது தமிழ்நாடு.