சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ஆட்சியாளர்களின் சமூகநீதி வேடம் கலைவதாக, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வை மாநில அரசுகள் நடத்துவதற்கு, அரசமைப்பில் வழியிருப்பதாகக் கூறியுள்ளார். பீகார், கர்நாடகா, தெலங்கானா அரசுகள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஆய்வை நடத்தியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அந்த ஆய்வை நடத்தாமால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டே வருவதாகவும், பெரியாரே எங்களது தலைவர் என சுய லாபத்திற்காக மட்டுமே அவரை பற்றி பெருமை பேசி வருவதாகவும், விஜய் சாடியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு முன்னோட்டமாக திகழும் CASTE SURVEY-வை மாநில அரசே நடத்தலாமே என கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில், மத்திய - தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாக கூறியுள்ள விஜய், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாக கலையும் எனவும் தெரிவித்துள்ளார்.