tvk vijay x page
தமிழ்நாடு

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை.. தொண்டர்களுக்கு தவெக அன்புக் கட்டளை!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் தனது 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று மேற்கொள்கிறார்.

PT WEB

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் தனது 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று மேற்கொள்கிறார்.

தவெக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். திருச்சி, அரியலூர் மாவட்டங்களைத் தொடர்ந்து அவர் இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து நாகை சென்றுள்ள விஜய், காலை 11 மணியளவில் வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடுகிறார். இதனைத் தொடர்ந்து நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை, புத்தூர் ரவுண்டானா, புத்தூர் அண்ணா சிலை பகுதிகளில் விஜய் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

tvk chief vijay

நாகை பரப்புரையை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் விஜய், திருவாரூர் செல்கிறார். அங்கு தெற்கு வீதியில் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். விஜயின் பரப்புரைக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட தவெக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக விஜயின் பரப்புரையையொட்டி காவல் துறையினர் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் த.வெ.க தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் 12 அன்புகட்டளைகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பிறப்பித்துள்ளார். அதன்படி, த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், முதியோர், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், வரவேற்பு நடவடிக்கைகள் வேண்டாம், போக்குவரத்துக்கு தொல்லை கொடுக்காதீர்.

tvk vijay

பிறர் மனம் புண்படும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்க உதவ வேண்டும், பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் போக்குவரத்து இடையூறு இருக்கக் கூடாது , காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள ஆனந்த், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் நிதானமாக கலைந்துசெல்ல வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.