Vijay in Hologram  web
தமிழ்நாடு

அடுத்தடுத்து ரத்தாகும் விஜயின் பரப்புரை.. வித்தியாச முயற்சியை கையிலெடுத்த TVK வேட்பாளர்!

விஜயின் நேரடி பரப்புரை ரத்தாக, ஹாலோகிராம் மூலம் ‘விஜய் அருகில் நிற்பது’ போல வினோத் நடத்திய நவீன பிரசாரம் கும்பகோணத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

PT WEB

திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், சென்னை முதல் தூத்துக்குடி வரை விஜயின் பிரசாரக் கூட்டங்கள் திட்டமிட்டு ரத்து செய்யப்படுவது கவனம் ஈர்த்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தவெக தலைவர் விஜயின் அடுத்தடுத்த பரப்புரை ரத்து செய்யப்படுவதற்கு மத்தியில் வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்துள்ளனர் நிர்வாகிகள். விஜயின் முகத்தை முதன்மையானதாக வைத்து மக்கள் மத்தியில் தவெகவை கொண்டுசெல்ல முயற்சிகள் எடுத்துவரும் நிலையில் இது கவனத்தைப் பெற்றுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், அந்தந்த கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vijay

திமுக மற்றும் அதிமுக ஆகிய மூத்த கட்சிகள் பல்வேறு வடிவங்களில் தங்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்கு இணையாக புதிதாக களம் காணும் தவெகவும் தங்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார் விஜய்.

அடுத்து கடந்த 10ஆம் தேதி காரைக்குடியில் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் வரவேற்பு ஏற்பாடுகளும் நடத்தப்பட்டு இருந்தது. விஜய் காலதாமதமாக சென்றதன் காரணமாக அங்கு பேசாமல் கையசைத்துவிட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

விஜய் பரப்புரை

இந்த நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் விஜய் பரப்புரை செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கூட்டம் ரத்தாகி உள்ளது. இது முதல்முறை அல்ல, சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், கடலுரில் 2 முறை, தற்போது அறந்தாங்கி என தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பரப்புரைகள் அனுமதி கிடைத்தும் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வினோத், பிரசார கூட்டத்தில் விஜய் பேசும் வீடியோவை ஹலோகிராம் (hologram projector) மூலம் தனக்கு அருகில் நின்று விஜய் பேசுவதுபோல் ஏற்பாடு செய்து வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்று அதற்கான சோதனை மட்டுமே நடைபெற்றதாகவும், வருகிற 16-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இந்த ஹாலோகிராம் விஜயுடன் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.