fire engine
fire engine file image
தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய இளைஞர்.. வெகு நேரமாக வராத ஆம்புலன்ஸ்.. கைகொடுத்து காப்பாற்றிய தீயணைப்புத்துறை

யுவபுருஷ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் முகேஷ் (18).  இவர் நேற்று மாலையில் அவரது இருசக்கர வாகனத்தில் கதிரேசன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எட்டயபுரம் சாலை வளைவு ரோட்டில் எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி சக்கரத்தில் சிக்கியுள்ளார். இதில் அவரது இடுப்புப் பகுதி முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. 

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த முகேஷ், ரோட்டிலேயே வெகுநேரமாக இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தீயணைப்புத்துறையினர், விபத்தில் சிக்கி வலியால் துடித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவரை மீட்டுள்ளனர். அவர்களது தீயணைப்புத்துறை வாகனத்திலேயே முகேஷை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

முகேஷுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதை  பொதுமக்கள் பாராட்டியுள்ளனர் .

விபத்து குறித்து  கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.