தமிழக சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர் கேள்வி - நேரம் தொடங்கியது. இதையடுத்து 2024- 25ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தொடரில் பலரும் எதிர்பார்த்ததுபோலவே மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிய, தீர்மானத்தின் மீதான விவாதம் பரபரப்பாக நடந்தது.
விவாதத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “சுரங்கத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே மாநில அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாமே? 10 மாதகாலம் என்ன செய்தீர்கள் என கேள்வி” எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களது உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக கேள்விகளை முன்வைத்தனர். டங்ஸ்டன் திட்டத்தினைத் தடுக்க நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறைக்கு எழுதிய கடிதத்தினையும் அதற்கு சுரங்கத்துறை அனுப்பிய பதில் கடிதத்தினையும் இப்போதுதானே சொல்கிறீர்கள். அதில் இருக்கும் தகவல்கள் எங்களுக்கு எப்படித் தெரியும். முழு விபரங்களை கூறாமல் தீர்மானத்திற்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
மொத்தமாக பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிச்சயமாக சொல்கிறேன்... உறுதியாக சொல்கிறேன்... ஒன்றிய அரசு சுரங்கத்திற்கு ஏலம் தொடங்கினாலும், இந்த அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்காது. இதுதான் எங்கள் முடிவு. திரும்பத் திரும்ப ஒன்று சொல்கிறேன். நான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் வரை இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவரமுடியாது. அனுமதிக்கமாட்டோம்” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முடிவில், சட்டசபையில் இருந்து வெளியில் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2023 ஆம் ஆண்டு கனிமவள சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியபோது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்திருக்க வேண்டும். 20 அரிய வகை தனிமங்களை எடுக்க அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த சட்டத்தினைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். மற்ற கனிமவளங்களை மாநில அரசு எடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திமுக, அதன் கூட்டணி எம்பிக்கள் எல்லாம் அழுத்தம் கொடுத்து இந்த சட்டத்தினை நிறைவேற்றவிடாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால், தடுக்கத்தவறியதால், மத்திய அரசு அந்த சட்டத்தின் வாயிலாக மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விடுத்து தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
3/10/2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். 2/11/2023 அன்று மத்திய சுரங்கத்துறை பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில், நீர்வளத்துறை அமைச்சர் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதுவும் எங்களுக்கு தெரியாது. சட்டமன்றத்தில் கேள்வி கேட்டப்பின் இதைச் சொல்கிறார்கள்.
கடந்த 9 மாத காலத்தில் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற எந்த கோரிக்கையும் வரவில்லை என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டம் நடத்தியபின், அதை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடுய மத்திய அரசுக்கு மாநில முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். அதிமுகவைப் பொறுத்தவரை தமிழக மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். அந்த வகையில் இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.