2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும் தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுகவின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். முன்னதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “சினிமா உலகத்தில் கடுமையான போட்டிக்கு இடையே தன்னை நிலை நிறுத்தியவர் விஜய். அவரது பெயர் பட்டி தொட்டி எல்லாம் தெரியும்; குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விஜய் என்றால் தெரியும். அந்த பிரபலம் அரசியலுக்கு தேவையானது. ஊடகமும் கருத்துக்கணிப்பு எடுப்பவர்களும் வரக்கூடிய தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறுகின்றனர். 2006 இல் விஜயகாந்த் தாக்கத்தை உருவாக்கியதை விட அதிகமான தாக்கத்தை வருகின்ற தேர்தலில் விஜய் உருவாக்குவார்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற தேர்தலில் பழனிசாமி 15 சதவீதத்திற்கும் கீழ் வாக்கு சதவீதத்தை பெறுவார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக்கொண்டால் அது தற்கொலைக்கு சமம் என்று தெரிவித்தார். மேலும், தவெக கட்சித் தொண்டர்கள் விஜயை முதலமைச்சராக ஆக்குவதற்குதான் விரும்புவார்கள். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும் தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.