எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகள்| கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்கள்!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. சிறந்த தமிழ் நூல், தமிழறிஞர்கள், சிறிய இதழ்கள், தமிழ் பண்பாட்டை பரப்பும் சங்கங்கள் கௌரவிக்கப்பட்டது..
தமிழ்ப் பேராயத்தின் 2025ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
எஸ்.ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆண்டு தோறும் தமிழ்பேராயம் என்ற அமைப்பு வாயிலாக தமிழ் இலக்கிய படைப்பாளிகள், தமிழ் இதழ், தமிழ் சங்கங்கள், தமிழ் அறிஞர்களுக்கு 12 தலைப்புகளின் கீழ் கடந்த 12 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதிபதி கற்பகவிநாயகம் பங்கேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் கரு.நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். தலைமை உரையாற்றிய பாரிவேந்தர், எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தின் முக்கிய அங்கமாக தமிழ்ப்பேராயம் உள்ளதாக கூறினார்.
தமிழ்ப்பேராயத்தின் வாயிலாக இதுவரை 3 கோடி ரூபாய் மதிப்புள்ள விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித தலையீடும் இன்றி தமிழ்ப்பேராயம் அமைப்பே தேர்வு செய்வதாகவும் பாரிவேந்தர் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகள்
பெரியம்மை நூலுக்காக எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்துக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதும், கவிஞர் இளம்பிறைக்கு கண்ணாடியில் தெரியும் பறவை நூலுக்காக பாரதியார் கவிதை விருதும் வழங்கப்பட்டன.
எழுத்தாளர் மருதனுக்கு கண்ணாடி கிரகத்தின் கவலை நூலுக்கு அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதும், பத்மஜா நாராயணனுக்கு அற்புத திருவந்தாதி நூலுக்காக ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருதும் வழங்கப்பட்டன.
முனைவர் சசிக்குமாருக்கு நிலவு எனும் கனவு நூலுக்காக அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருதும், அமுதனுக்கு எகிப்தில் தமிழர் நாகரீகம் நூலுக்காக பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருதும் வழங்கப்பட்டன.
பிருந்தா சீனிவாசனுக்கு பெண் எனும் போர்வாள் நூலுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருதும், வதிலை பிரபாவுக்கு மகாகவி இதழுக்காக சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதும் வழங்கப்பட்டன.
திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் செல்லப்பனுக்கு தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதும், ஆதித் தமிழர் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆடலரசுவிற்கு அருணாசலக் கவிராயர் விருதும், பேரா.கோ.தெய்வநாயகத்துக்கு பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன.

