விஜய் - டிடிவி தினகரன் pt
தமிழ்நாடு

“நாங்க வெகுண்டெழுந்தால் தாப்பாகிடும்..” - விஜயை எச்சரித்த டிடிவி தினகரன்

தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்..

Rishan Vengai

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையில் களமிறங்குகிறது தமிழக வெற்றிக் கழகம். டிடிவி தினகரன், விஜயை நேரடியாக விமர்சித்து, எம்ஜிஆர் போல மாற முடியாது என கூறினார். விஜயின் அரசியல் முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், எங்களை விமர்சித்தால் பதிலுக்கு நாங்கள் வெகுண்டெழுந்தால் தப்பாகிடும் என எச்சரித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். முதலில் தவெக, அதிமுக உடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட பரப்புரை கூட்டத்தில் தவெக கொடியுடன் சிலர் பங்கேற்றதை வரவேற்று பேசியிருந்தார். ஆனால் முடிவில் தவெக-அதிமுக கூட்டணி என்பது இல்லாமல் போனது.

தவெக தலைவர் விஜய்

இந்தசூழலில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து தமிழகத்தில் திமுகவிற்கு ஒரே எதிர்கட்சி தவெக தான் என்றும், திமுக உடன் அதிமுகவையும் ஊழல் கட்சி என்றும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை விஜயை நேரடியாக தாக்கிப்பேசாத அதிமுகவும், அதிமுக தலைவர்களும் தற்போது நேரடியாக தாக்கிப்பேச ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சிப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், நாங்க எல்லாம் வெகுண்டெழுந்தால் தப்பாகிடும் என பேசியுள்ளார்.

விஜயைதாக்கிப்பேசிய டிடிவி தினகரன்..

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தை போட்டுக்கொண்டு அவர் ஓட்டு கேட்கிறார். எங்கள் கட்சியையும் ஆட்சியையும் ஊழல் ஆட்சி என்கிறார். என்ன இது சினிமாவில் டபுள் ரோல் பண்ணுவது போல் டயலாக் யாரும் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா சினிமாவில் நடித்து வருபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? விஜயை முதலில் வீட்டைவிட்டு வெளியே வரச் சொல்லுங்கள், ஊடகங்களைச் சந்திக்க சொல்லுங்கள்.

சும்மா டயலாக் பேசிக்கிட்டு இருக்கார்.. தேவையில்லாம எங்கிட்ட வந்து ஏன் உரசணும்? நாங்கலெல்லாம் வெகுண்டு எழுந்தால் தப்பாகிவிடும் பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிக்கப் போகிறாரா?. அவருக்கு ஆட்சி அமைக்க ஆசை இருந்தால் அமைக்கட்டும், திமுகவை விமர்சிக்க வேண்டுமானால் விமர்சிக்கட்டும், நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பதால் எதுவேண்டுமானாலும் பேசுவதா’ என தாக்கிப் பேசினார்.

மேலும், ஏற்கனவே விஜயகாந்த் போன்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சொன்னேன். புரட்சித்தலைவர் போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எங்குமே நான் சொன்னதில்லை. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

விஜயகாந்த் 2006 இல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். எட்டு சதவீதம் வாக்கு வாங்கினார், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். எங்களையும் அவர்களையும் பாதித்தார் என்று சொன்னேன். அதைவிட சற்று அதிகமாக பாதிப்பு இருக்கும் என்று சொன்னேன்.

ஆனால் எம்ஜிஆர் மாதிரி வருவார் என்று நான் சொல்லவில்லை. நான் சொன்னதற்கு நீங்கள் வேறு அர்த்தம் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு இல்லை என்று பேசினார்.