விஜய் - டிடிவி தினகரன் web
தமிழ்நாடு

”விஜயை தவறாக வழிநடத்துகிறார்கள்; தார்மீகப் பொறுப்பு தவெக உடையது” - டிடிவி தினகரன்

கரூர் விபத்தில் தவெகவுக்குதான் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும், விஜயிடம் உள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

Rishan Vengai

கரூர் விபத்தில் தவெகவுக்குதான் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும், விஜயிடம் உள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அரசு தரப்பு மற்றும் தவெக தரப்பு இருவரும் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் பரப்புரை

இந்தசூழலில் தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு பேசுகையில், முதல்வருக்கு எதிராக பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து பேசியிருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விஜயை உடனிருப்பவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.

விஜயை தவறாக வழி நடத்துகிறார்கள்..

கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், ”கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு தவெகவில் யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாக போயுள்ளது. இதில் எப்.ஐ.ஆர். போட வேண்டிய அவசியமும், கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. இதனால், நான் அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம். நடுநிலையாக பார்க்கும் போது எல்லாம் சரியாக தான் நடக்கிறது.

த.வெ.க. ஒன்றும் திட்டமிட்டு செய்யவில்லை. இது ஒரு விபத்து தான். உண்மையில் விஜய் பேசியிருந்த வீடியோவை பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. அவர் சினிமாவில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் அரசியலுக்கு புதியவர், அனுபவம் இல்லாதவர். அவருடன் இருக்கும் நிர்வாகிகளுக்கும் அனுபவம் குறைவு. தவெகவிற்கு தான் கரூர் சம்பவத்திற்கான தார்மீகப் பொறுப்பு உள்ளது. விஜய் தர்மீக பொறுப்பு ஏற்றிருந்தால், நீதிமன்றம் அவர் மீது கண்டனம் தெரிவித்திருக்காது. ஆனால் தங்களின் மீது பழி வந்து விடும் என அவருடைய ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அமைதியாக இருந்து இருப்பார் என நான் நினைக்கிறேன். விஜயை தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று பேசியுள்ளார்.