2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் அதிமுக-பாஜக உடன் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணைந்துள்ளது. ஓ. பன்னீர் செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்காக அழைத்துள்ளார் டிடிவி தினகரன், தர்மயுத்தம் நடத்தாமல் இருந்தால் ஓபிஎஸ் முதல்வராகியிருப்பார் என அவர் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருந்துவரும் அதிமுக-பாஜக, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்புமணி தலைமையிலான பாமகவையும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவையும் கூட்டணிக்குள் இழுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம் என சூளுரைத்த டிடிவி தினகரன், இறுதியில் அதே தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஐக்கியமாகியுள்ளார்.
இந்தசூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வமும் வருவார் என தெரிவித்திருந்த டிடிவி தினகரன், தற்போது ஓ. பன்னீர் செல்வத்திற்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "யார் பேச்சையோ கேட்டு "தர்மயுத்தம்" நடத்தாமல் ஒரு வாரம் பொறுத்திருந்தால் ஓ.பன்னீர் செல்வமே மீண்டும் முதல்வராகி இருப்பார்.
நானே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விட்டேன், நீங்கள் எதற்கு யோசிக்கிறீர்கள்? யாருடைய உள் அழுத்தத்திற்கும் செவி சாய்க்காமல், உங்களை வாழ வைத்த இயக்கத்திற்கு நீங்கள் நன்றி கடன் செய்ய வேண்டிய நேரம் இது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து அவரிடம் நான் பலமுறை பேசி உள்ளேன். ஆனால் அவருக்கும் சில தர்ம சங்கடங்கள் உள்ளது. அவற்றையெல்லாம் களைந்து எங்களுக்காக, எங்களுக்கு ஆதரவாக அவர்தான் முன்னெடுத்து வரவேண்டும்" என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய, தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு தேனியிலிருந்து டிடிவி தினகரன் அழைப்பு விடுத்தார்.