திமுக அரசுக்கு அவதூறு கூறியதாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐ.டி. பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான புகார் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தவெக-வைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். அதேபோல, தவெக ஐ.டி. விங்கும், திமுக அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.
இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம்சாட்டி கருத்துக்களை தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐ.டி. விங் ஆகியோருக்கு தடை விதிக்கக் கோரி, திமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர். மேலும் ஜெம் வீரமணிக்கு எதிராக 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி புகார் வந்தநிலையில், மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், எந்த தலையிடும் இல்லாமல், எந்த தாமதமும் செய்யப்படாமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு உண்மை நிலைக்கு மாறாக திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் ஐ.டி. பிரிவு அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் முன் கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டுமெனவும், அவ்வாறு நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வாதிட்டார்.
அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், அமைச்சர்கள் என்ற முறையில் அல்லாமல் தனி நபர்கள் என்ற முறையிலேயே அமைச்சர்கள் இருவரும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெம் வீரமணி வழக்கில் தங்களை இணைத்து பேசிய அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவிற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.