காங்கிரஸ் Vs சமாஜ்வாதி.. சீட் பங்கீட்டால் முற்றும் மோதல்.. உடைகிறதா உ.பி. கூட்டணி?
உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக் கட்சிகளிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 403 உறுப்பினர்களைக் கொண்ட உபி சட்டப்பேரவையில், சமாஜ்வாதி கட்சியிடம் காங்கிரஸ் சுமார் 150 இடங்களை எதிர்பார்க்கிறது. அதாவது, சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே 50:50 என்ற சம விகித அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது. ஆனால், சமாஜ்வாதியோ ‘தாங்கள் பெரிய கட்சி என்பதால் சுமார் 350 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். ஆகையால், காங்கிரஸுக்கு சுமார் 55 இடங்களை மட்டுமே ஒதுக்கமுடியும்; ஆகையால் இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது’ என கறார் காட்டியுள்ளது.
மேலும், 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றிபெற்றதும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. ஆனால், அப்போது காங்கிரஸ் வெறும் 2 இடங்களிலேயே வெற்றி பெற்றது.
மேலும், 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்க மறுத்த விவகாரம் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட நீண்ட இழுபறிகள் போன்ற கடந்தகால நிகழ்வுகளும் இந்தத் தொகுதிப் பங்கீட்டில் மூக்கை நுழைத்துள்ளன. இதனாலேயே காங்கிரஸுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என சமாஜ்வாதி தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், இருதரப்பிலும் இழுபறி நீடிப்பதுடன், வார்த்தைப் போரும் வெடித்து வருகிறது.
கூட்டணி குறித்த சலசலப்புகள் பொதுவெளியில் விவாதமாக மாறியதை அடுத்து, கட்சித் தலைவர்கள் மாறிமாறி தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இவ்விவகாரம் பூதாகரமானதை அடுத்து தலையிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “கூட்டணியில் எத்தனை இடங்கள் உள்ளன அல்லது எந்த இடம் யாருக்குச் செல்கிறது என்பது முக்கியமல்ல; நாம் அனைவரும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்பதே முக்கியம். மீண்டும் சொல்கிறோம்: இது தொகுதிகளைப் பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியது. ” என என அழுத்தமாக கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பில், தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு எட்டப்படும் எனக் கூறிவரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் இந்த உட்கட்சி உரசலை ஆளும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

