பிணையில் வெளியே வந்த இளைஞர் ஹரிஹரன். புதிய தலைமுறை
தமிழ்நாடு

“யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்” - நாக்கை பிளந்து டாட்டூ போட்ட திருச்சி இளைஞர் அறிவுரை!

“என்னைப்போல் யாரும் இதுபோல் டாட்டூ போட்டால் அவர்களும் விளைவுகளை சந்திக்க நேரிடும். யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்” - நாக்கை பிளந்து டாட்டூ போட்ட திருச்சி இளைஞர்

PT WEB

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தவர் ஹரிஹரன். இவர் கடந்த வருடத்தில் மும்பைக்கு சென்று நாக்கை இரண்டாகப் பிளந்து டாட்டூ போட்டுள்ளார். தொடர்ந்து நாக்கை நீட்டி, பாம்பு போல் அது நீளும் காட்சியை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.

கைதான இன்ஸ்டாகிராம் பிரபலம்

அதைப்பார்த்து, ஹரிஹரணின் ஸ்டூடியோவிற்கு சென்ற அவரது நண்பரான ஜெயராமனுக்கும், தன்னைப் போலவே அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டு உள்ளார் ஹரிஹரன். பின், ‘ஏலியன் எமோ ஸ்டூடியோ’ என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார் ஹரிஹரன்.

இந்நிலையில், இவரது வீடியோ அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் சந்தேகத்தின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சட்டவிரோதமாக இவர்கள் செயல்படுவது தெரியவந்தது. அதன்பேரில், ஹரிஹரன் மற்றும் ஜெயராமனை கோட்டை காவல் நிலை போலீசார் கடந்த 16.12.2024 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் ஹரிஹரன் கடந்த ஒரு வருட காலமாக இந்த ஸ்டூடியோவை வைத்து நடத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 7 மாதத்திற்கு முன்பாக மும்பைக்கு சென்று கண்களில் நீல நிறமாக மாற்றி (நிறத்தை பூசியும்) 7 லட்ச ரூபாய் செலவில் நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சையும் செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பிணையில் வெளியே வந்த இளைஞர் ஹரிஹரன்

இந்நிலையில் நாக்கை பிளந்து டாட்டூ போட்டு கைதாகி சிறையில் இருந்த ஹரிஹரன், நேற்று (08.01.2025) ஜாமினில் வெளிவந்தார். வந்தவர், மற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் நன்றி தெரிவித்தும் அறிவுரை கூறியும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஆகியோர் இருவரும் மனநிலை ஆலோசகர் மூலம் அறிவுரை வழங்கினார்கள். அவர்களுக்கு என் நன்றி.

என்னைப்போல் யாரும் இதுபோல் டாட்டூ போட்டால் அவர்களும் வலி மற்றும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

எனக்கு எந்த ரவுடி மற்றும் அரசியல்வாதிகள் யாருடனும் பழக்கம் கிடையாது. நான் டாட்டூ ஸ்டுடியோ மட்டுமே வைத்திருந்தேன்” என்றுள்ளார்.