திருச்சி ரவுடி
திருச்சி ரவுடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருச்சி : "என்னை என்கவுண்டர் செய்யப் போகிறார்கள்" குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய ரவுடி!

PT WEB

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன் என்ற ரவுடியை திருச்சி எஸ்.பி.ஐ தனிப்படை போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் அருகே உள்ள நத்தமாடி பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் என்பவரை  திருவெறும்பூர் போலீசார் அடுத்த சில தினங்களில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட பரபரப்பு  அடங்கி முடிவதற்குள் பட்டறை  சுரேஷை போலீசார் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டறை சுரேஷ் மீது வழக்குப் பதியாமல் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

பாட்டில் மணி

இந்த நிலையில் தற்போது திருவெறும்பூர் அருகே உள்ள கீழே கணபதி நகரைச் சேர்ந்த பாட்டில் மணி (எ) தினேஷ்குமார் ( 30 ) என்ற நபரைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் எஸ்.பி தனிப் படை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது 5 கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் சில வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  திருவெறும்பூரில் கடந்த  2019 ஆம் ஆண்டு பிரபல ரவுடி ரஜினி (எ) கருப்பையாவைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகப் பாட்டில் மணி சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் ரஞ்சித்குமார்  என்பவர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லக்  கூடாது என அறிவாளைக் காட்டி மிரட்டியதாக  ரஞ்சித்குமார்  கொடுத்த புகாரின் அடிப்படையில்  திருவெறும்பூர்  போலீசார் பாட்டில் மணியைக் கைது செய்ததாகக் கூறப்பட்டது.

கடிதம்

இந்நிலையில் பாட்டில் மணி “என் மீது பல வழக்குகள் நிலுவையில்  உள்ளது. அந்த வழக்குகளுக்கு முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறேன். அப்படி ஆஜராகச் செல்லும்பொழுது போலீசார் என்னை பொய் வழக்குகள் போட்டு கைது செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கின்றனர். இதனால் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது என்னை கைது செய்து என்கவுண்டர் செய்ய உள்ளதாகத் தெரிய வருகிறது. நான் தற்பொழுது குற்றச் செயல்கள் செய்யாமல் திருந்தி வாழ முடிவு செய்துள்ளேன். ஆனால் போலீசார் பிடித்து வழக்குப்  போடுவதுடன் என்னை சுட்டுக் கொள்ளச் சதித் திட்டம் தீட்டி உள்ளார்கள். நான் இந்த அளவுக்கு ரௌடியாக மாறியதற்கு நான் மட்டும் காரணம் இல்லை. தமிழக போலீசாரும்தான் காரணம். எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழ்நாடு போலீசார்தான் முழு காரணம். எனவே இதை எனது கடைசி மரண வாக்குமூலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை இந்தியக் குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட 16 அரசுத் துறை அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் புகார் மனு செய்துள்ளதாகவும் பி.டி.எப் கடிதம் ஒன்றும் பாட்டில் மணி பேசியதாக ஆடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில்   வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவம் திருச்சியில் உள்ள ரவுடிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.