ஓசூர் | மதுபோதையில் தகராறு செய்த மகன்.. சமாளிக்க முடியாமல் தந்தை எடுத்த விபரீத முடிவு!
கர்நாடக மாநில எல்லையான ஆனேகள் அருகே உள்ள நாராயனபுரா பகுதியை சேர்ந்தவர் எல்லப்பா. இவருடைய மகன் சுரேஷ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்த பின் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர்.
அப்படி வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் சுரேஷ். இதனை அவருடைய தாயார் கண்டித்துள்ளார். மது போதையில் இருந்த சுரேஷ் தன் தாயிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய தந்தை எல்லப்பா, சுரேஷை கண்டித்துள்ளார்.
இதனையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அது முற்றிப் போகவே, ஆத்திரமடைந்த எல்லப்பா சுரேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், எல்லப்பாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் தகராறு செய்த மகனை, தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.