செய்தியாளர்: வி.சார்லஸ்
பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று திருச்சிக்கு வந்த விமானத்தில் உடைமையில் மறைத்து கடத்திவரப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட விமான பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு 10 கோடி என கூறப்படுகிறது.
மேலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமானத்திற்கு வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடமையில் இரண்டு அரிய வகை பல்லி இருந்தது கண்டறியப்பட்டது இதையடுத்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்நிலையில், கடந்த சில தினங்களாக வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாக அரிய வகை உயிரினங்களை தொடர்ந்து கடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.